இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்கு என்பதும் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தால் வேறு வேறு வடிவங்களுக்கு மாறி இருக்கின்றது. அவற்றுள் மிக முக்கியமானவைகள், OTT Platforms எனப்படும் நிகழ்நிலை தளங்கள் (Netflix, Amazon prime, hotstar ,etc ), பலதரப்பட்ட சுய காணொளி/படமெடுக்கும் செயலிகள் (Tiktok, Helo etc ), சில விளையாட்டு செயலிகள் மற்றும் நிகழ்நிலை செயலிகள் மூலம் ஆடப்படும் சூதாட்டம் போன்றவைகள்.
4G/5G என அதிவேக இணையதள சேவையால் இது மேலும் மேலும் வளரவே செய்யும். பல்வேறு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பெரும் லாபத்திற்காக இத்தளங்களுக்கு மேலும் பலநூறு லட்சம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதே நோக்கமாக கொண்டும் செயல்படும்.
ஆனால் இதில் மிக வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் பெரும்பாலான நிகழ்ச்சிகள், இணையத்தொடர்கள் (Web Series) பொதுமக்கள் (குறிப்பாக இளைஞர்கள், பதின்பருவத்தினர், குழந்தைகள்) பார்ப்பதற்கு தகுதியற்றதாகவே இருக்கின்றது. கதைக்கு சிறிதும் தேவையில்லாத வன்முறை, காமம், நிர்வாணம் புகுத்தப்படுகின்றது. ஒருவேளை தன் திறமை (அ) கதை மேல் நம்பிக்கை இல்லாமல் போதல், வணிகரீதியான வெற்றி என்ற ஒற்றை குறிக்கோள் போன்றவைகள் இவ்வாறாக செயல்பட தூண்டுகின்றனவோ? காரணம் எதுவாயினும் காலப்போக்கில் ஒரு சமூகத்தையே பாழாக்கும் எதையுமே நாம் அனுமதிக்க கூடாது. இவ்வகை ஊடகங்களுக்கென்று எந்த ஒரு தணிக்கையோ, கட்டுப்படுத்தக்கூடிய ஒரு அதிகார குழுவோ கிடையாது என்பது மிகவும் வருந்தத்தக்க அதே சமயம் ஆபத்தான உண்மை.
இதுபோல எந்தஒரு கட்டுப்பாடும் இல்லாமல் செயல்படும் ஊடகங்கள் மற்றும் செயலிகளால் மிக எளிதாக இளைஞர்களை கெடுக்க முடியும்.சூதாட்ட செயலிகளால் ஒரு சோம்பேறித்தனமான சமுதாயத்தை உருவாக்கவும் மேலும் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தி அவற்றின் மூலம் மன வளத்தை குன்றச்செய்யவும், மன உளைச்சலை ஏற்படுத்தவும் வழிவகுக்கும்.
மெய்நிகழ் நிரல்களின் (Reality Shows ) தரத்தைப் பற்றி குறிப்பிடவேண்டுமென்றால் அது மிக மிக மோசமான, அபாயகரமான வளர்ச்சியைத்தான் அடைந்துள்ளது !
படைப்பாளிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சுயகட்டுப்பாட்டுடன், அதீத பொறுப்புடன் இயங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் நாம் ஏற்கனவே இவர்களின் பொறுப்பை, தரத்தை பல்வேறு சகலமக்கள் ஊடகங்களில், திரைப்படங்களில் பார்த்தாயிற்று. எனவே தானாகவே பொறுப்புடன் இயங்குவார்கள் என்ற நம்பிக்கை ஒரு கேலிக்கூத்தாக தான் இருக்க முடியும். இதற்கென்ன தனியாக ஒரு தணிக்கை குழு (அ ) ஆய்வுசெய்யும் குழு அமைத்துத்தான் இவ்வாறான இழிவான சிந்தனைகள்,வசனங்கள், ஆடையின்மை/நிர்வாண காட்சிகள், கொடூரமான வன்முறை காட்சிகள், அறத்தை மீறிய பல்வேறு காட்சி அமைப்புகள் போன்றவற்றை தடுக்கவும், குறைக்கவும் இயலும். இதேநிலை தான் Tiktok , Helo போன்ற செயலிகளுக்கும். ஒருவர் என்ன வேண்டுமானாலும் படம்பிடித்து,காட்சிப்படுத்தி சுயமாக பதிவேற்ற முடியும் என்ற நிலை மாற வேண்டும். நம் செயல்களுக்கு நாமே பொறுப்பு என்ற நிலையை உருவாக்க வேண்டும். மீறினால் சர்வ நிச்சயமாக அவற்றிற்கான தண்டனை கிடைக்கும் என்பதை உறுதி படுத்த வேண்டும்.
இவ்வாறான செயலிகளால் பின்வரும் ஆபத்துக்கள் ஏற்படலாம்
#1 தகவல் திருட்டு மற்றும் தன் அடையாளம் திருடப்படுதல்
#2 சேகரித்த தரவுகளை தவறான வழிகளுக்கு பயன்படுத்துதல் – வணிகரீதியான சந்தைப்படுத்துதல், நிகழ்நிலை மோசடிகள் போன்றவைகளில் ஈடுபடுதல்
#3 வளரும் குழந்தைகளின் சுபாவத்தை மிகவும் வக்கிரமாகவும், வன்முறையை தூண்டுவதாகம் மாற்றுதல்
#4 தேச பாதுகாப்பு தொடர்பானவைகள் – குறிப்பாக போர்திறன் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் இருப்பிடம் அறிதல், எல்லையோர இடங்களை படம் பிடித்து அவற்றில் பதிவேற்றுவதின் மூலம் துல்லியமாக இருப்பிடம் மற்றும் செயல்பாடுகள் அறிதல், அதுவும் இம்மாதிரியான செயலிகள் நம் எதிரி அல்லது இணக்கமற்ற நாட்டினுடையதாக இருந்தால் மேலும் சிக்கல்களை ஏற்படுத்த எதுவாக அமையும். இத்தரவுகளால் மக்களின் விருப்பத்தை எளிதாக அவர்களால் வகை படுத்த முடியும். அதைக்கொண்டு அம்மக்களை அரசிற்கு எதிராக போராடும் படியோ, களங்கம் விளைவிக்கும் படியோ செய்ய முடியும். அவ்வாறான உள்ளடக்கம் நிறைந்த பதிவுகள், காணொளிகள், விளையாட்டுகள் மூலம் அவர்களை தன் நாட்டிற்கு எதிராக செயல்பட வைக்க முடியும்!
ஏற்கனவே தாமதமாகிவிட்ட நிலையிலும், இப்பொழுதாவது விழித்து கொண்டு OTT தளங்கள், சுய காணொளி செயலிகள் (Self-Videos Apps), நிகழ்நிரல் விளையாட்டு மற்றும் சூதாட்ட செயலிகள் (Gaming and Gambling Apps) மற்றும் மெய்நிகழ் நிரல்கள் (Reality Shows ) இவற்றிற்கென்ன தனியாக ஒரு தணிக்கை முறையை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதுபோன்ற நடைமுறையில் உள்ள மற்றும் புதிதாக எதிர்காலத்தில் வரும் செயலிகள், தளங்கள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளை ஆராய்வதற்காக ஒரு தனி அதிகாரமுள்ள அமைப்பை உருவாக்கியே ஆக வேண்டும். அவமதிக்கத்தக்க, கண்ணியம் குறைவான உள்ளடக்கங்கள், சமூக ஒழுங்கை குலைத்தல், ஆபாசமானவைகள், ஜாதி, மத வேறுபாடுகளை தூண்டுதல், பிரிவினைவாதம் மற்றும் வன்முறையைத் தூண்டுபவைகள் போன்ற பல்வேறு கோணங்களிலிருந்து அவற்றை அணுகி ஆராய வேண்டும். அரசாங்கம் அதற்கான கொள்கைகளை விரைவாக வகுக்க வேண்டும்.
எப்படி ஆளும் கட்சியினைப் பற்றியோ, ஆட்சியாளர்களைப் பற்றியோ அவதூறு/கண்ணியக்குறைவான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் இடம்பெற்றால் உடனே அதை நீக்க மற்றும் பதிவேற்றியவர்களைத் தண்டிக்க முடிகிறதோ, அப்படி ஒரு வேகத்தில் செயல்பட்டால் மிக்க நன்று. இவற்றையெல்லாம் தடுக்கவே முடியாது என்பதைப் போல, எப்படி நம்மால் இவ்வாறான இழிவான,ஆபாசமானவைகளை உலவ விட்டு கொண்டிருக்க முடிகிறது!
சில இணைய தொடர்களின் உள்ளடக்கங்கள் விவேகமானதாகவும், நல்லவற்றை கூறும் தொடர்களாகவும் உள்ளன என்பதை மறுப்பதிற்கில்லை. ஆனாலும் இன்னும் நிறைய தொடர்கள், நிகழ்ச்சிகள் பார்க்க தகுதி அற்றதாகவும், நம் கண்டனத்திற்குரியதாகவுமே உள்ளன…!
“நல்லது செய்வோரை தட்டிக் கொடுப்பதும் அல்லது செய்வோரைக் குட்டி வைப்பதும் இத்தருண தேவை!”
ஜெய்ஹிந்த்.
உங்கள் பிரஹா
தங்களின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்
மறைந்திருக்கும் உண்மைகள்
இன்றைய சூழலில் பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்ப்பது என்பது மிகவும் கடினமான செயல்.
பெற்றோர்கள் சிறிது முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகளை நல் வழி நடத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
மிக்க நன்றி! ஒவ்வொருவரும் கொஞ்சம் சிந்தித்து செயல் பட்டால் நம்மால் கண்டிப்பாக இவற்றையெல்லாம் தடுக்க முடியும்!