அனைவருக்கும் வணக்கம்!
இன்றையக் காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கடினமாகி கொண்டே போகின்றது. கூட்டுக்குடும்ப வழக்கில் இருந்து சிறிதுச் சிறிதாக நகர்ந்து சிறிய குடும்பமாய் சுருங்கி உள்ளது நகரக்குடும்பம்! பெற்றோரும் முழுநேர குழந்தை வளர்ப்பில் ஈடுபட முடியாத சூழல், பொருளாதாரத் தேவை மற்றும் பலவற்றிற்காகவும் இருவரும் வேலைச் செய்ய வேண்டிய கட்டாயம் அல்லது விருப்பம்….
அன்றாட வாழ்வில் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்ற உறவுகளின் வாடை இல்லாமல் வளரும் இளம் பருவம். இவ்வளவு சிரமங்களுக்கிடையே அவர்களை நல்ல பிள்ளைகளாக, சிறந்த குடிமக்களாக வளர்க்க வேண்டிய நிலை பெற்றோர்க்கு. குழந்தைகளை தடம் புரட்டிப்போடும் எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும், நான் ஒரு முக்கியமான மற்றும் ஒரு கவனக்கத்தவறிய கோணத்திலிருந்து “திரைப்படம்” என்ற ஒன்றை பார்க்கிறேன். பொதுவாகவே திரைப்படங்கள் அனைவரையும் பாதிக்கக்கூடிய ஒரு ஆற்றல்மிக்க “சகலமக்கள் ஊடகம்”(mass media வை தமிழ் படுத்த முனைகிறேன் வெகுஜனம் என்பதை தவிர்த்து) அப்படி இருக்கும் போது வளரும் குழந்தைகளை இது மிகவும் அதிகமாக பாதிக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
இன்றைய காலகட்டத்தில் தமிழ் மற்றும் பிற மொழி இந்திய படங்கள் பெரும்பாலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கும் உண்மை.இதைப் பற்றி விரிவாக மற்றொரு பதிவில் கேட்கலாம்.
இக்கட்டுரையில்,
மிகவும் கேவலமாக அருவருக்கத்தக்க இரட்டை அர்த்தமுடைய திரைப்படப் பாடல்கள் மற்றும் அவ்வாறான காட்சிகள் குறித்து விவரிக்க விழைகிறேன்.
முதலில் அவ்வாறான பாடல்கள், காட்சிகள் எடுப்பதே தவறு, உடன்பாடில்லை என்றாலும் குறைந்தபட்சம் அவற்றை ‘Prime time’ எனப்படும் முக்கியமான நேரங்களில் ஒளிபரப்புவதை தடைச்செய்ய வேண்டும். இப்படிப்பட்ட பாடல்கள், வசனங்கள் மற்றும் நகைச்சுவை காட்சிகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நாடகங்கள், விளம்பரங்கள், பண்பலை அலைவரிசைகள் மற்றும் அனைத்து ஊடகங்களிலும்!
என்/நம் குழந்தைகளுக்கு எதைக் கேட்க வேண்டும் எதைப் பார்க்க வேண்டும் என்பதை நாம் பார்த்து பார்த்து செய்யும் போது, என் வரவேற்பறை வரை வந்து அவர்களைக்கெடுப்பதற்கு கூத்தாடிகளுக்கு எந்த உரிமையும், தகுதியும் அறவே கிடையாது.
மிக முக்கியமாக பள்ளிகளில் ஆண்டு விழா, விளையாட்டு விழாக்களின் போது இந்தப்பாடல்களுக்கு நடனம் ஆடுவதை முற்றிலுமாக தடைச்செய்ய வேண்டும். அதுவும் ஆசிரியர்களே அவர்களுக்கு பயிற்சி அளிப்பது, ஊக்குவிப்பது காலத்தின் கொடுமை!
மற்ற பொது நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளும் தடைச்செய்தல். இன்றியமையாதது!
அவற்றிற்கான நேரத்தை பின்னிரவு பிறகு ஒதுக்குவது இதை ஓரளவு கட்டுப்படுத்த உதவும்.
தன் தகுதிக்கு மீறி வருமானம் ஈட்டும் முதல்தர ஹீரோக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும், படைப்பாளிகளும், இன்னபிற கலைஞர்களும் தான் உறிஞ்சிக் கொழுக்கும் சமூகத்திற்கு குறைந்தபட்சம் இவ்வாறானப் பாடல்கள், காட்சிகள், வசனங்களை குறைத்து பாவமன்னிப்பைத் தொடங்கலாம்;கொஞ்சமேனும் பொறுப்பான குடிமகன்களாக மாற முற்படலாம்!
“The real power of mass media should be used properly by all means & sense”!!
பின்குறிப்பு:-
திறன்பேசிகள் (smartphones) மற்றும் நிகழ்நிலை (online) செயல்பாடுகள் குறித்து ஒரு பெரிய கட்டுரையே புனையலாம். அதை நீங்கள் முறையாக கவனித்துக் கொள்வீர்கள் என்று நம்பிக்கையில்….
உங்கள் பிறஹா!!! நன்றி…..