ஓர் இனம் | One Species

2
3057

ஓர் இனம்|One Species

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” உலகமே

ஒன்றென எக்களித்தான் கணியன் பூங்குன்றன்

“காக்கைக் குருவி எங்கள் ஜாதி” என்று

காதுக்குள் ஓதிச் சென்றான் மஹாகவி பாரதி

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என

வாரி அனைத்துக் கொண்டார் வள்ளலார்!

இவ்வாறு அஃறிணையைக் கூட அரவணைக்கும்

அறம் செறிந்த பெருமைமிகு பூமி இது!

இவ்வினவழி வந்த மானம் கெட்ட மானிடனே

இதயம், சாதி ஊனமுற்ற தற்கால மனிதனே

மெத்தப் படித்த சுத்த முட்டாளே!

மெய்யறிவு என்பது பெரும் சமத்துவம் காண்பது

ஆனால் உன் பொய்யறிவு இன்றும்

வெறும் பிரிவினை வளர்கின்றது!

இன்றும் ஜாதிப்பேய் உனைப் பிடித்து ஆட்டுகின்றது

இழிந்த தீண்டாமைத் தீ மானுடம் வாட்டுகின்றது!

மனிதக் குரங்கே; மாடர்ன் விலங்கே! அறிந்துகொள்

ஒராங்குட்டானுக்கும் உனக்கும் நிறத்திரியில்

வெறும் மூன்றே விழுக்காடு வித்தியாசம்!

மரபணு – DNA வின் ஒற்றுமை

மனிதனுக்கு மனிதன் 99.9 சதவீதம்!

இதில் எங்கு கண்டாய் பிரிவினைப், பிறப்பால்

என்ன கண்டாய் ஏற்றத்தாழ்வு?

அகங்காரம் அறு; ஆணவம் ஒழி

அதுவே உலக சமத்துவம் பேண வழி!

மனிதப் பிணிகளில் வகைகள் பற்பல

பிறவிக் கோளாறு ஒருவகை

பின்னர் வளரும் கோளாறு மறுவகை

உண்ணாவிட்டால் இரத்தசோகை; மிகுத்து உண்டால் அஜீரணம்

அணு கட்டற்று வளர்ந்தால் அது புற்று

வேற்றணு மட்டற்று உட்புகுந்தால் அது தொற்று

மூளையின் நியூரான்கள் அழிக்கும் உன் சாதிமத பற்று!

பிறவிலேயே ஜாதிப்பிணியோடு பிறப்பவர் சிலர்

வளர்ப்பு முறையால் நஞ்சிட்டு, நம்பிடுவர் பலர்!

இடையில் வந்தவனே, ஈன புத்தி கொண்டவனே

யாரடா நீ

இறைவனின் படைப்பை வகுத்து வைக்க?

மனுதர்ம சாத்திரங்கள் மதமாற்ற சாக்கடைகள்

ஆப்ரஹாமின் நாமம் சொல்லி நஞ்சிடும் வஞ்சகர்கள்!

பேதம் வளர்க்கும் எவையும் வேதம் இல்லை

தீவிர வாதம் ஓதும் எவையும் இறைநாதம் இல்லை

சாத்தான்கள் சமைக்கும் எவையும் சமயம் இல்லை

மனிதனை பூதமாய் மாற்றும் எவையும் புனிதநூலும் இல்லை!

ஆம்! வேதம் புதுமை செய்வோம், வேண்டுமென்றால்

வேற்றுமை வளர்க்கும் சாத்திரங்கள்

வெறுத்தே வேறு செய்வோம்!

தீண்டினால் கூட தீட்டு ஒட்டிக்கொள்ளுமென
தீண்டாமைக் கொடுமை பேசும் காட்டுவாசிக் கூட்டமே!
தீர்க்கமாய் நான் கேட்கிறேன்
ஈனப்பிறவி நீயா? இல்லை அவனா?

தாழ்த்தப்பட்டவன் தீண்டிய அரிசி பருப்பு

தானியம் காய்கறி மாமிசங்கள்

தீண்டாமல் அவை தின்னாமல்

தன்சாதிப் பெருமை பேசிப்பேசி

தரணியில் மடிந்தவர் எவருமுண்டோ?

நவீன தீண்டாமைத் தலைவிரித்து ஆடுதுங்க

நகர்புறத்திலும் அது செழித்து சட்டத்தின் ஓட்டை தேடுதுங்க

பட்டியலின ஒன்றியத்தலைவன் கொடி ஏற்ற

மறுப்பு கொடி பிடிச்சி ஓடுதுங்க

மனத்தால் கலந்து மணமுடித்த ஜோடிகளை

இனத்தால் பிரித்து, கௌரவக் கொலை செஞ்சே போடுதுங்க!

மேற்சாதி இழிசாதி இச்சூத்திரத்தில் மட்டுமிங்கே

கொடுமைகள் அநீதி நடப்பதில்லை

இரண்டாம் நிலை இடையிடைச் சாதிகளின்

இரக்கமற்ற ஆதிக்கங்கள் விரித்துரைக்க நாதியில்லை!

(கீழ்) வெண்மணிக் கொடூரம் வெறும் வெள்ளைத்தோலால் ஆனதில்லை!

மாஞ்சோலை மரணங்கள் மறந்தே என்றும் போனதில்லை

ஊரில் ஒடுக்கப்பட்ட கட்சியின் பெருங்கூட்டம்

பார்-இல் ஒடுக்கப் படாதவர்களாய் பேயாட்டம்!

வறுமை ஜாதி மதம் அறியாமை

வற்றாமல் பாதுகாக்கும் அரசியல்வாதியின் துர்மதி

விழித்து கொள் என் சக தோழா

யாவும் வாக்கு அரசியலின் பெரும் சதி!

என்றும் பெயரோடு பின் சேர்க்காதே

உன் சாதிய அடை மொழியை

இன்றே வேரோடு பிய்த்தெறி உள்மனதில்

சாதி எனும் விஷச்செடியை!

ஜாதிகள் கேட்கா கல்வித்தளங்கள் படைத்திடுவோம்

வீதிகள் தோறும் ஒளியேற்றி இருளை துடைத்திடுவோம்!

மண்ணில் அவதரித்த மனிதர் யாவரும்

ஓர் இனம் என்றே உரக்க சொல்லி வைப்போம்

மறுக்கும் கூட்டத்தை மனித இனமே அன்று

என முழுதாய் நாம் தள்ளி வைப்போம்!!

ஜெய்ஹிந்த்

 

உங்கள் பிரஹா

2 COMMENTS

  1. semma powerful words and marana adi to the worthless people who play in the name of caste and religion! great Prahaa.. keep scritping on these kind of much needed issues…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here