ஊழல்!

14
6953

ஊழல்!

பாருக்குள்ளே நல்ல நாடு நம்ம

பாரத நாடு தாங்க

பாடி வைச்ச பாட்டன் பாரதி

பார்த்தால் வெட்க கேடு தாங்க..

நரம்பு புடைக்க மதுவிலக்கு பிரச்சாரம்

தேர்தல் நடந்து முடிஞ்ச உடன்

மது ஆலை வியாபாரம்!

கஷ்டப்பட்டு உழைச்ச விவசாயி கடைசியில்

கடன்பட்டு தினம் தற்கொலைகள்

கேட்டதுண்டா உங்க ஊரில் ஏதும்

அரசியல்வாதி தற்கொலை செஞ்ச கதை?

எம்முயிரே எம் ஞானமே கொஞ்சமேனும்

எண்ணிப் பாரு இதை!

புதியதோர் வேதம் செய்ய சொன்ன

எம்பாட்டன் பார்க்கலையே

இச்சாத்தான்கள் வேதம் ஓதுவதை!

குட்டி கவுன்சிலர் கூட எங்க இந்தியாவில

கூகுள் சிஇஓ வாழ்க்கை வாழுறானுங்க

கட்டி வைச்சே தோலை உரிக்கணும்ங்க

கதறி கண்காணாம அவன் தெறிக்கணும்ங்க!

சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல்

சூறையாடப்பட்டது ஐஎன்ஏ மற்றும்

சுபாஷ் சந்திர போஸின் பெரும் புதையல்

அடுத்து வேகமெடுத்தது ராணுவ ஜீப்புகளாய்

உண்மை உறங்கிவிட்டது வெறும் கோப்புகளாய்!

நகர்வாலாவின் நுண் நடிப்பின் வழி

நயமாய் கேட்டது இந்திராவின் ஓலி?

பங்குச் சந்தையையே பங்கிட்ட ஹர்ஷத் மேத்தா

ஆனால் முன்னோடி முந்தரா அவனுக்கே தாத்தா!

சும்மா உட்காரய்யா ஓரமா என்றே

கிடப்பிலிடப்பட்ட சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகள்

கிழித்தது தெளிவாய் திராவிட குஞ்சுகளின் முகமூடிகள்!

பூச்சு மருந்தும் பூரா தெளிச்சாச்சு

மகனை வைத்து படமும் எடுத்து முடிச்சாச்சு

அண்ணா மேம்பாலம் அழகா ஒப்பந்தமாச்சு

மது ஆலைகளில் மலையாய்  பணம் கொட்டியாச்சு

பஞ்சம் பஞ்சம் தண்ணீர்ப் பஞ்சம்

வஞ்சம் வஞ்சம் வகையிலா வஞ்சம்

புராணம் அல்ல நம்ம வீராணம் கதைதான்!

மதியால் செய்த சதியால் விளைந்த பெரும் நிதி!

பிறகு பீரங்கியாய் வெடித்தது போபர்ஸ்

கரீபிய தீவின் சந்தியும் சிரித்தது செயின்ட் கீட்ஸ்

ஒண்ணுக்கும் உதவாதவன் வெறும் புண்ணாக்கு

ஆனா அதையே நீ பொன்னாக்கு என்பதே

மாட்டு தீவன ஊழலில் லாலுவின் கணக்கு!

இரும்புத் தாதும், நிலக்கரியும்

சும்மா கிடக்குது நிலத்தில் என்று

சுரங்கம் தோண்டி தோண்டி முழுதாய்

சுரண்டி மலையாய் குவித்த மதுகோடா!

நுழைவுத் தேர்விலும் நுழைந்தன ஓநாய்கள்

விடைத்தெரியா வியாபம் மரணங்கள்…

இணைப்பிரியா அன்புச் சகோதரிகள்

இணைந்தே குவித்த அசையா சொத்துக்கள்..

இவ்வாறு

பாரதம் தழுவிய ஊழல் விளையாட்டுகளில்

விளையாட்டை மட்டும் விட்டுவிட்டால்

விளங்காமல் போகும் என்று

வினைப்படுத்திய காமன் வெல்த்

விளையாட்டு பெரும் ஊழல்!

ராணுவ உணவுப்படியில் கொள்ளை அடிச்சாங்க

குண்டுதுளைக்காத உடையால் உயிர் குடிச்சாங்க

மின் உற்பத்தியை இருட்டால் நிறைச்சாங்க

சுடுகாட்டிலும் பிணக் கொட்டகை பிரிச்சாங்க!

தொழிலாளர் வைப்புநிதியால் தன்நிதி நிறைச்சாங்க

பச்சைப்பால், நெல், பயிர்களின் தரம் குறைச்சாங்க

பயிர்க்காக்கும் உரத்திலும் தரமா அடிச்சாங்க

நிலம் காக்கும் மரமும் காடும் அழிச்சாங்க…!

ஆற்றுத்தாயின் அடிவயிறு ஆழ கிழிச்சாங்க

மணல் கொள்ளையால் பணத்தில் குளிச்சாங்க!

வங்கிகள் என்றும் அக்ஷயப்பாத்திரம் போல்

வழங்கியே வந்தன விஜய் மல்லையாக்களுக்கு

வாராது எனத் தெரிந்தே வகை வகையாய்

தாராளமாய் தந்து தீர்த்த மேலாளர்களை

தண்டிக்காமல் மேம்போக்காய் விட்டு விட்டோம்!

பழகி பழகித் மிகத்தேர்ச்சி ஆச்சு ஊழல்

பெருச்சாளி மிகவும் பெருத்தே போச்சு

அத்துணை ஊழல்களுக்கும் மகுடம் வைச்சு

அலைக்கற்றைக் கற்றையாய் அனைவருக்கும் ஒதிக்கியாச்சு!

வண்ண வண்ணமாய் கட்சிக்கொடிகள் பறக்குதுங்க

வக்கனையா சுவிஸ்பெட்டகம் கருப்பாய் நிறைக்குதுங்க

கட்சியின் கருவூலம் கனமாய் வளர்த்தாங்க

கடைசியில் தாய்நாட்டின் கருவையேக் கலைச்சாங்க

சொன்னது மேல ரொம்ப கொஞ்சமுங்க

சொல்லி அழ விம்முது என் நெஞ்சமுங்க

சில லட்சங்களில் தொடங்கிய சாபம் இன்று

பல லட்சம் கோடிகளில் அடங்க மறுக்குதுங்க

நாசமாய் போன நயவஞ்சகர் வயிறைப் பெருக்குதுங்க!!

கலால்துறை காவல்துறை பதிவுத்துறை பொதுப்பணித்துறை

கல்லாக்கட்டும் துறைகள் ஆச்சு எல்லாம்

நீதி கேட்டு மாமன்றம் சென்றால் பாவம்

அஃது மரணமடைந்து மாமாங்கம் ஆச்சு!!

சித்தம் பதைக்கிறது ரத்தம் கொதிக்கிறது

சரி தான் போடா எங்கள் சகிப்புத் தன்மையென்று

நித்தம் மடமை அறுத்தே புத்தம்புது பூமி செய்ய

ஆழ்ந்த அரசியல் ஞானம் அடைந்திடுவோம்

ஆட்சி அதிகாரம் அமைப்பு சமைத்தே அவ்வழி

அழுக்கை நீக்கி அழகான பாரதம் படைத்திடுவோம்!!

ஜெய்ஹிந்த்

 

உங்கள் பிரஹா

14 COMMENTS

  1. முற்றிலும் மாறுபட்ட பரிமாணம்

    எண்ணிலடங்கா ஊழல் சம்பவங்களை மாலையாய் கோர்த்து சமர்ப்பித்த கவிதை
    வரிகள் – சிறப்பு

    • மிக்க நன்றி…தங்கள் நேரத்திற்கும், புரிதலுக்கும்

  2. கவிதை நன்றாக இருந்தது. தமிழ் சொற்களை கையாண்ட விதம் அருமை

    • நன்றிகள் பல; தங்களின் பாராட்டிற்கும், நேரத்திற்கும், ஆதரவிற்கும்..

  3. சில லட்சங்களில் தொடங்கி பல லட்சங்களாக மாற்றம்.ஊழல் ஒழியட்டும்!

    • நம் அனைவரின் பங்களிப்பும் முக்கியம், அரசியலில் நல்லவர்களை தேர்ந்தெடுப்போம்!

  4. உண்மை, உண்மை; ரத்தம் கொதிக்கிறது இவற்றையெல்லாம் நினைத்தால்!மிகவும் அருமையான கவிதை!

    • மிக்க நன்றி, தங்கள் கருத்திற்கும் தொடரும் ஆதரவிற்கும்! அனைவருக்கும் அரசியல் விழிப்புணர்வு மிக மிக அவசியம்.

  5. அரசியல் வெற்றிடத்தை நீங்களும் நிரப்பி விடுவீர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here