இன்றைய காலக்கட்டம் ஒப்பீட்டு அளவில் நம் பெற்றோர்களின் காலத்தை விட வேகமான மாறுதல்கள் உடையதாக உள்ளது. அனைவருக்கும் கல்வி,  தரமான உயர்கல்வி வாய்ப்புகள், நிலையான அரசுகள்,  உலகமயமாக்கம்,  அதீத மருத்துவ வளர்ச்சி, பெரும் போர்கள் இன்மை, எல்லாவற்றிற்கும் மேலாக வெவ்வேறு துறைகளில் நிகழ்ந்த வளர்ச்சிகள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவியல் (Artificial Intelligence), இயந்திர கற்றல் (Machine learning), குவித்தரவு (Big data), அணுஇயக்கவியல் (Quantum machines), கூட்டுத்தொகுதி (Block chain), நுண்ணணுவியல் (Nanotech), உயிரிதொழில்நுட்பவியல் (Biotech), உயிர் அறிவியல் (Life sciences) மற்றும் பல.

“மாற்றமே என்றும் மாறாதது”, என்ற கிரேக்க அறிஞர் ஹெராக்ளிடஸ் இன் விவேக சிந்தனை நம்மில் பலருக்கு தெரியும்.  குழந்தைப் பருவத்திலிருந்தே ஏதோ ஒரு வழியில் இது நமக்கு கற்பிக்கப்பட்டு வந்துள்ளது. மாற்றம் என்றைக்குமே மனிதனுக்கு மனிதன் வேறுபட்டே வந்திருக்கிறது மேலும் அவற்றை நாம் கையாண்ட விதமும் அப்படியே. நமக்குப் பிரியமானவர்களின் மறைவு அல்லது குழந்தைப் பிறப்பு போன்ற மிகப்பெரிய வாழ்க்கை நிகழ்வில் அவற்றின் தாக்கத்தை அதிகமாக உணர்ந்திருப்போம் மேலும் மாற்றத்திற்கான கால இடைவெளி என்பது சற்று அதிகமானதாகவே இருந்து வந்திருக்கின்றது. இன்றைய காலத்தில் அவ்விடைவெளி வேகமாக சுருங்கி வருகிறது,  எதிர்காலத்தில் விரை  வான மாற்றமே நம் வாழ்க்கைமுறையாக மாறக்கூடும்.

ஏனோ நாம் நீண்ட காலமாகவே இந்த பிரபஞ்சம் நமக்கு வழங்கிய படிப்பினை, ஞானம் மற்றும் எச்சரிக்கைகளை புறக்கணித்து கொண்டே வருகிறோம். மேற்கோள்களாக சில நிகழ்வுகள்:-பல்வேறு இனங்கள் அழிதல் அல்லது அழிவு நிலைக்கு தள்ளப்படுதல்,  புவி வெப்பமடைதல் மற்றும் புதிய நோய் கிருமிகளின் தோற்றம் போன்ற பல.  இதுவே நமக்கு சிந்திக்க சரியான தருணம்,  எப்படி நாம் இந்த இக்கட்டிலிருந்து வருங்கால சந்ததியினரைக் காப்பாற்றப் போகிறோம் மற்றும் விரைவான மாற்றத்திற்கு சித்தபடுத்த போகிறோம் என்று. இதை காலத்தின் கட்டாயமாக கருதாமல் ஒரு உண்மையான தேவையாகக் கருதுவதே நலம்.

எதிர்காலத்தில் மேல் கூறிய அனைத்து தொழில் நுட்பங்களும் மிகவும் வேகமாக வளர்ந்திருக்கும், மேலும் அக்காலத்திற்குரிய புதிய தொழில்நுட்பங்களும் நிறைந்திருக்கும். இவற்றை கருத்தில் கொண்டு, சற்றேறக்குறைய 50 வருடங்கள் கழித்து நம்முடைய வாழ்வு, தொழில், வேலை, அவற்றிற்கான தயார் நிலைக் குறித்து என் சிற்றறிவிற்கு எட்டிய ஒரு தொலைநோக்கு பார்வையை பின்வருமாறு காட்சிப்படுத்த முயல்கிறேன்.

நம் பெற்றோர்கள் ஒரு நிறுவனத்திலோ அல்லது அரசாங்கத்திலோ ஒரு வேலையை பெற்று  முப்பது முப்பத்தைந்து ஆண்டுகள் சேவைக்கு பிறகு ஓய்வுப் பெற்று நிம்மதியாக அவர்களின் சேமிப்பு மற்றும் ஓய்வு  ஊதியத்துடன், மகிழ்ச்சியுடன் குடியேறிய காலம் மறைந்து விட்டது.  நம் தலைமுறையில் நம்மால் ஒரே தொழிலில், தொழில்நுட்பத்தில், அல்லது  அதை சார்ந்தவற்றில் சிறு சிறு மாற்றங்களுடன் நம்மால் பணிச்செய்ய முடிந்தது. நம் வாழ்நாளில் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு விதமான வேலைகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் நமது வருங்கால தலைமுறைக்கு அவர்களின் வாழ்க்கைமுறை,  சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் தேவைகள் மிகவும் புதியவைகளாகவும்,  அதிகமான திறமைகளை கோரக்கூடியதாகவும் இருக்கும். மாற்றம் ஒன்றே அவர்களின் வாழ்க்கை முறையாக இருக்கலாம்.

இப்புதிய நெறியைச் சமாளிக்க நம் சந்ததியினருக்கு நாம் வழங்கிவரும் வழக்கமான கல்வி மற்றும் அறிவைத்தாண்டி புதிய திறமைகளை உருவாக்கி வளர்க்க வேண்டியது அவசியம்.

அவற்றுள் மன ஸ்த்திரத்தன்மை, அசைக்க முடியாத தன்னம்பிக்கை, எந்த நெருக்கடியிலும் அதை சமாளிக்கும் அமைதியான மனம்,  நெகிழ்வுத்தன்மை,  தேவைக்கேற்ப மாறும் திறன் மற்றும் தன் சுய அறிவு கொண்டும்,  சுற்றுப்புறத்தில் நிகழ்ப்பவைகளைக் கொண்டும் எதிர்கால உடனடித்தேவையைக் கணிக்கும் திறன் போன்ற பண்புகள் மிகவும் இன்றியமையாததாகும். ஒருவேளை அக்காலத்தில் AI & ML நம்மிடமிருந்து பெரும்பான்மையான வேலைகளை எடுத்துக்கொள்ளலாம்,  அதேசமயம் அத்தொழில்நுட்பப் புரட்சி மேலும் பல புதிய புதிய வேலைகளையும் ஏற்படுத்தக்கூடும். இது ஒரே மாதிரியான எளிதில் செய்யக்கூடிய வேலைகளுக்கும் மட்டுமல்லாமல்,  இதுவரை மனித மூளையின் பகுப்பாய்வு ஆற்றல் தேவைப்படும் வேலைகளுக்கும் இது பொருந்தும்.

தானியங்கிகள் மூலம் மாற்றுவதற்கு எளிதான, திறமையற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் வேலைவாய்ப்புகள் பற்றி மட்டுமல்லாமல்,  மருத்துவர்கள்,  பொறியாளர்கள், வழக்கறிஞர்கள்,  தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் இவ்வாறானவற்றைப் பற்றியும் நான் பேசுகிறேன்.

எதிர்கால தொழிலாளர்கள் தங்களுடைய முதலாளியாக இருக்கப்போகின்ற அதிநவீன ஆழ்கற்றல் நிரல்கள் (Neural network masters) மற்றும் அவற்றின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாவிட்டால், அவர்களால் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் வேலை செய்ய முடியாமல் போகலாம். அவ்வாறு இல்லையென்றாலும் நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு இணக்கமற்றது என்று வேறு சில உயர் கணினி வழிமுறைகளால் (algorithms)  நிராகரிக்கப்படலாம்!

உங்களின் மேலாளர்கள் மற்றும் வழிகாட்டிகள் போல,  உங்கள் ஒவ்வொரு அசைவையும் ஏதோ சில உயர்கணினி வழிமுறைகள் கண்காணித்துக் கொண்டே இருக்கும்,  உங்களை மட்டுமல்ல உங்களின் எஜமானர்களைக் கூட!

ஒரே விதமான திறமை மற்றும் அதே தொழிலில் பதினைந்து இருபது வருடங்கள் வேலை செய்வது என்பது எதிர்காலத்தில் வழக்கற்று போகக்கூடும். அவர்கள் தங்கள் திறமைகளுடன் புதிய திறமைகளை விரைவாக வளர்த்துக் கொள்வதற்கோ,  விரிவாக்கம் செய்து கொள்வதற்கோ தயார் நிலையிலேயே இருக்க வேண்டும். சிலசமயம் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வதற்கு தன் திறமைகளை குறைத்துக்கொண்டோ, சுருக்கிக் கொண்டோ செயல்படவேண்டியும் வரலாம்.  இவை அனைத்தையும் மிகவும் குறுகிய காலத்திற்குள் செய்ய பழகிக் கொள்ள வேண்டும். குறுகிய காலம் என்பது பல வேளைகளில்  மாதமாகவோ,  ஏன்; ஒரு வாரகாலம் அவகாசமோ மட்டுமே இருக்கும். புதிய கோரிக்கைகள் மற்றும் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள,  அவர்கள் ஒரு வலுவான மனநிலையையும்,  தெளிவையும் கொண்டிருக்க வேண்டும்.  எனவே அவர்கள் மிக விரைவாக கிரகித்துக் கொள்ளவும்,  தங்களின் கல்வி மூலம் கடத்தப்பட்ட அறிவாலும்,  அனுபவத்தின் மூலம் முயன்று பெறப்பட்ட அறிவாலும் மேலும் அக்காலத்தில் இருக்கக்கூடிய மிகவும் புதிய முன்னேற்றம் அடைந்த தொழில்நுட்ப அறிவாலும் தங்களை தயார்படுத்திக் கொள்ளமுடியும்.

எனவே நமது எண்ணங்களின் மீள்நிலை முக்கியத்துவத்தை நமக்கும்,  நம் வருங்கால சந்ததியினருக்கும் கற்றுவிப்போம்.

இந்த பிரபஞ்சத்தில் நாம் தான் ”பரிணாம வளர்ச்சியின் உச்சம்” என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிப்போம்!!!

சில துணுக்குகளை மட்டுமே இங்கே வழங்கி சுருக்கமாக முடிக்கிறேன்,  மற்றொரு கட்டுரையில் இதை வேறொரு கோணத்தில் காண்போம்!!!

மிக்க நன்றி,

உங்கள்                                                                                                                         பிரஹா

8 COMMENTS

  1. அருமையான, உபயோகமான கட்டுரை. தமிழ் எழுத்துகளை மட்டுமே உபயோகித்தால் இன்னும் சிறப்பு.

    • நன்றி! தற்கால தொழில்நுட்ப வார்த்தைகளை தூய தமிழ் படுத்தியிருக்கிறேன்.. பெரும்பாலானவர்களுக்கு புரியாமல் போய்விடக்கூடாது என்பதால் அடைப்புக்குறிக்குள் அதற்கான ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன். உதாரணமாக “குவித்தரவு” (For Big data ). இது நான் மொழிபெயர்த்த சொல்!

      • Block chain (கூட்டுத்தொகுதி), அதிநவீன ஆழ்கற்றல் நிரல்கள் (Neural network masters), உயர் கணினி வழிமுறைகளால் (algorithms) இவைகளும் நான் மொழிபெயர்த்த சொற்களே! நம் மொழியில் எல்லா தொழில்நுட்பச் சொற்களும் வழங்கும் வகையில் இருக்க வேண்டும் என்ற பேராவலின் விளைவாக ஒரு சிறிய முயற்சி.. புரிதலுக்கு நன்றிகள்!

    • Yeah apart from the regular technical skills, education. They need to be trained on various other interpersonal and mainly on their self adapting and accommodative skills…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here